ஆரோக்கியமாக வாழ்வோம்
'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்' என்ற சொல்லிற்கிணங்க, உயிர்வாழ முக்கிய காரணிகளில் உணவும் ஒன்று. நாம் உண்ணும் உணவே நமது உடல் செல்களை உருவாக்குகிறது. உணவின் தன்மை நமது உடல் உறுப்புகளின் தன்மையாக மாறுகிறது.எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைவிட செறிக்கக்கூடிய உணவினை உண்கிறோமா என்பதை தான் முக்கியம். உண்ணும் உணவு உடல் செல்களை உருவாக்கக்கூடியதாக அமைதல் அவசியம்.
ஆரோக்கிய உணவுகள்
உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் உணவுகளான கீரைகள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், அரிசி, கோதுமை, சிறு தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்ப்பதுடன் , பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என்றும் நம் உணவுத்தட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும். முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரலாம். நிறைந்த காய்கனிகளுடன் உண்ணும் உணவே உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமான உணவாக அமையும்.
நோய்களை உருவாக்கும் சில காரணிகள்
நிறமிகள்
உணவினை அழகுபடுத்த நாம் பயன்படுத்தும் பல நிறமிகளும்
நம் உடலிற்கு ஒவ்வாதனவாகவே உள்ளன. நாம் பயன்படுத்தும் செயற்கை நிறங்கள் நம் கண்களுக்கு
வேண்டுமானால் குளிர்ச்சியாக இருக்கலாம், ஆனால்
நம் உள் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றிற்கு அவை கேடுவிளைவிக்கின்றன. சீரணத்தை குறைத்து உணவினை உடலுடன்
சேர விடாமல் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் குடல்களின் வேலைகளை சீரற்றுபோகச் செய்கின்றது.
மலச்சிக்கல், குடல்புண், சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு அடித்தளமாகிறது. நம் கண்களை
கவருகிற ஒரே காரணத்திற்காக பேக்கரி (அடுமனை) உணவுகளுக்கு முக்கியத்துவம் தந்து நம்
உடலை நோயுற்றதாக மாற்றுகிறோம். பிறந்தநாள் கேக் துவங்கி ஜிலேபி, பீட்சா, பர்கர், லட்டு,
மிட்டாய்கள், ஐஸ்கிரீம், பஜ்ஜி என அனைத்து திண்பண்டங்களும் இன்று நிறமிகள் சேர்த்தே
உருவாக்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாக தவிர்க்க வேண்டும்.
மைதா
நாம் உண்ணும் உணவில் தரமற்றது என்றால் மைதாவைத்தான்
கூற வேண்டும். நார்ச்சத்து அறவே இல்லாத இந்த உணவு மலச்சிக்கலுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதில் சேர்க்கும் இரசாயன கலவைகள் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்,
இதய நோய் மற்றும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் காரணிகளாக உள்ளன. பேக்கரிகளில் உருவாகும்
பல உணவுகளில் மைதா முக்கியமான பொருளாக உள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் பிஸ்கட், பிரட்,
பரோட்டா போன்றவை சிறுவர்களின் சுவை நரம்பினை சுண்டி இழுக்கக்கூடியனவாக அமைந்துள்ளன.
சிறுவர்களின் உடல் பருமன் கூடுவதற்கு மைதா சேர்ந்த உணவுகள் முக்கியமான காரணியாக உள்ளன.
ஆகையால் மைதா உணவுகளை தவிர்க்கும் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
எண்ணெய்
உடலுக்கு தேவையான 100 சதவிகிதம் கொழுப்பால் ஆனது
எண்ணெய். ஆனால் எண்ணெய் ஒரு சமைக்கும் பொருள் அல்ல. எண்ணெய் அதிக சூடானதென்றால் அதன்
கொழுப்பு நமது உடலுக்கு பயனற்றதாகிவிடுவது மட்டுமில்லாமல் விஷமாகவும் மாறும். இரத்த
குழாய்களில் படியும் தன்மைகொண்டதாக மாறிவிடும். எண்ணெயில் சமைத்த உணவு உடல் நலத்திற்கு
உகந்ததல்ல, நம் மூதாதையர் சமைத்தது போல எண்ணெயை
கடைசியில் தாளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது தெளித்து சாப்பிட வேண்டும்.
எண்ணெயில் சமைத்த (பொரித்த) காய்கறிகள், உணவுகள் உட்கொள்வதால் மிக கொடிய நோய்களான இதய
அடைப்பு, பக்கவாதம், உடல்பருமன் போன்ற நோய்கள் உருவாகின்றன.
இவை தவிர நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெண் சர்க்கரை
(சீனி), அதிகமாக பயன்படுத்தும் மசாலா வகைகள், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பதனிடப்பட்ட
உணவுகள், நூடுல்ஸ் போன்றவை பற்களின் பலத்தை குறைப்பதுடன் சீரண சக்தியை குறைத்து நெஞ்சிசெரித்தல்,
அல்சர் எனும் வயிற்றுப்புண், மலச்சிக்கல், சர்க்கரை நோய், தோல் நோய்கள், எலும்பு பலவீனம்,
வைட்டமின் குறைபாடுகள், இரத்த சோகை, ஹார்மோன் பிரச்சனைகள் என நம்மை ஒரு நோயாளியாக்கி
விடுகிறது. இந்த நோய்களிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட
உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
''உணவால் உடலை கெடுக்காதே
உணவே மருந்து, மருந்தே உணவு'
ஆரோக்கிய உணவை உண்டு என்றும்
ஆரோக்கியமாக வாழ்வோமாக!
கருத்துகள்
கருத்துரையிடுக